Saturday, 5 September 2009

உண்மைத்தன்மை குறித்து பல நேரங்களில் சிந்திக்கிறேன். எவ்வாறு உண்மையாளனாகக் காட்டிக் கொள்வது, எப்படி மற்றவர்களுக்கு அதனை விளங்க வைப்பது. உண்மையில் நான் நல்லவன். என்னிடம் கெட்ட எண்ணங்கள் இல்லை. தீவிரவாதம் தொடர்பாகவோ அல்லது குண்டு வெடித்தல் தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவனோ அல்லது அப்படியான சிந்தனைகளிலோ நான் இல்லை என்று எப்படி அவர்களுக்கு விளங்கப்படுத்துவது?
அண்மையில் ஜெர்மனிக்குப் போய்விட்டு வந்த ஒரு இரவுப் பொழுது நேரம் இரவு 11.50. நித்திரை, உடல் களைப்பு, பிரயாண சோர்வு, ஸ்ரண்டட் எயார் போட்டில் இருந்து எனது இடத்துக்கு ரக்ஸி பிடித்துப் போவதென்றால் அறுபது பவுன் செலவழிக்க வேண்டும். அவ்வளவு பணத்தைச் செலவழிக்க எனது மனைவி இப்பொழுதெல்லாம் அனுமதி தருவதில்லை. எல்லாம் கிறடிட் கிறஞ் செய்த மாயம்.
ஐரோப்பா விமான நிலையத்தில் பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு வேறு வரிசை; எங்களைப்போல வெளிநாட்டு அன்னியருக்கு வேறு வரிசை. எனது பாஸ்போர்ட்டை வாங்கிப்பார்த்த இமிகிறேசன் அதிகாரி சீல் குத்திவிட்டார்.
ஆனால் பக்கத்தில் நின்ற சி.ஐ.டி.யோ யாரோ, பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு என்னைக் கூப்பிட்டுக்கொண்டு போய் ஒரு ரூமுக்குள் இருத்திவைத்துக் கேள்வி கேட்டான்.
அந்தக் கேள்விகளில் பாஸ்போர்ட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த அதிகாரி என்னிடம் கண்டதெல்லாம் நான் ஒரு முஸ்லிமாக இருப்பதுமட்டும்தான். ஐரோப்பாவில் பிறந்த முஸ்லிமோ அல்லது வெளிநாட்டில் இருந்து வந்த முஸ்லிமோ என்ற பாகுபாடு இல்லாமல் ‘முஸ்லிம்கள் என்றால் சந்தேகி’ என்ற ஒரு நிலைமை ஐரோப்பாவில் தோன்றிவருவது தெளிவாகத் தெரிகிறது.
எங்கே இருக்கிறீர்கள்? இங்கு முஸ்லீம் இளைஞர்கள் எப்படி? உங்களது பக்கத்து வீட்டுக்காரர் யார்? உங்களது மனநிலையில் வெள்ளைக்காரர் எப்படி? உங்களுக்கு இந்த நாடு பிடித்திருக்கிறதா? ஏதேனும் வெறுப்பு இருக்கிறதா இங்கு? என்று அந்த ஒஃபிஸர் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக உரையாடல். எனக்கு ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது. நடுச்சாமத்தில் என்னை வைத்திருந்து என்ன கேள்வி?
முஸ்லீம்கள் என்றாலே குண்டு வைத்து விடுவார்களோ எனும் சந்தேகத்துடனேயே அவர்கள் இருக்கிறார்கள். அதனால் அதிகமாக பயப்படுகிறார்கள். அப்படி சில சம்பவங்கள் இங்கே நடந்திருக்கின்றன. அடிப்படைவாதம் அல்லது இஸ்லாமிய அதீத பற்று போன்ற விடயங்கள் இங்குள்ள மீடியாக்களில் அடிக்கடி பாவிக்கும் ஒரு விடயமாக இருக்கிறது.
ஒரு இஸ்லாமிய இளைஞனை தாடி, தலைப்பாகை, ஜிப்பா, பைஜாமா தோற்றத்தில் கண்டால் பொலிஸில் இருந்து இமிகிறேஸன் ஒஃபிஸர் வரை மிரண்டு போகிறார்கள். இதுதான் இப்பொழுது பெரும் பிரச்சினையாக-ஐரோப்பாவில்-இருக்கிறது.
உண்மையில் இது பின்லேடன் என்ற நபரை முன்னிறுத்தியதான ஒரு தோற்றப்பாடான அச்சமாகும். இரட்டைக் கோபுரத்தைத் தாக்கிய சூத்திரதாரி என்று சந்தேகிக்கும் பின்லேடன் தாடி, ஜிப்பா, தலைப்பாகை கட்டி இருக்கிறார் என்பதற்காக அந்த உடை ஒரு தீவிரவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதனை என்ன வென்று சொல்ல.
முஸ்லிம்கள் பயன்படுத்தும் அல்லது மதரஸா பிள்ளைகள் பயன்படுத்தும் ரூமால் அல்லது பெரிய ஸ்காஃப் ஏதோ பயங்கரவாதத்தின்அடையாளம் போல ஒரு மருட்சி காணப்படுகிறது.
இந்தியாவில் இருந்துவந்த ஒருவர் எனது நண்பனுக்கு அந்த ஸ்காஃபை கொடுத்தார். குளிருக்கு கழுத்தில் சுற்றிக் கொள்ளச் சொல்லி. ஆனால் அந்தத் தமிழ் நண்பர் எனக்குத் திருப்பித் தந்துவிட்டார். அவர் என்னிடம் தரும்போது சொன்னார் ‘என்னத்துக்கு சும்மா வம்பு’. உண்மையில் அவர் தமிழர். இந்த விறைக்குளிருக்கு கழுத்தில் கட்டுவதற்கே பயப்படுகிறார் அந்த ஸ்காபை. அதாவது மனப்பயம் சந்து இடமெங்கும் வியாபித்துள்ளது விளங்குகிறது.
அண்மையில் சி.என்.என். தொலைக்காட்சியில் இந்த ஸ்காஃபை கட்டியிருந்த ஒரு பாடகி பயங்கரவாதத்தின் சின்னத்தை அணிந்திருக்கிறார் என்று ஊதிப் பெரிதுபடுத்திவிட்டார்கள். அது ஒரு பெரிய விவாதமாகவே ஆகி பிரிட்டனிலும் பெரும் செய்தியாக வந்தது.
என் பாஸ்போர்ட்டை திருப்பித்தந்த அந்த ஒஃபிஸர் சொன்னார், ‘இது ஒரு சாதாரணமான விசாரிப்புதான், குறை விளங்க வேண்டாம்’. இங்கே குறை விளங்குவதற்கு அப்பால் ஒரு முஸ்லிம் ஆளை ஒரு கிறிஸ்தவர் எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் பிரச்சினை. மும்பைத் தாக்குதலின்போதும் இது தெளிவாகவே தெரிந்தது. இஸ்லாமிய தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றுதான் எல்லா டெலிவிசன், பேப்பர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தன.
ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி என்றோ அல்லது இந்துத் தீவிரவாதி என்றோ அல்லது பௌத்த தீவிரவாதி, யூத தீவிரவாதி என்று எந்த ஊடகங்களும் குறிப்பிட்டு சொல்வதில்லை.
இஸ்லாமிய தீவிரவாதி என்பது ஒரு சமூகத்தை வேரோடு அசைத்துப் பார்க்கிற சொல். அதுதான் இப்பொழுது உலகமெங்கும் நடக்கிறது.
ஒரு பொதுமகன் எவ்வாறு உண்மையானவன் என்பதனை பொலிஸிடமும் இமிக்கிறேசன்காரரிடமும் நிரூபிக்கிறது என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது ஐரோப்பாவில்.
ஐரோப்பாவில் இருக்கின்ற அனேகமான முஸ்லிம்களின் பூர்வீகம் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பாலஸ்தீனம் என்றுதான் இருக்கின்றன. அவர்களின் பூர்வீக நாடுகளில் எல்லாமே யுத்தம் நடக்கிறது. அந்த யுத்தத்தில் யாராவது ஒரு சொந்தக்காரன் ஒரு தொடுசலாக இருப்பான். அதனால் இவருக்கும் ஒரு தொடுசல் வர சாத்தியம் இருக்கிறது. அப்படித்தான் பலர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஆனால் மதத்தைச் சொல்லி ஒரு முழுச் சமூகத்தை விரல் சுட்டி பயங்கரவாதிகள் என்று சொல்வது தினம் தினம் அதிகரித்துச் செல்கின்ற ஒரு விடயமாக மாறிவருகிறது ஐரோப்பாவில்.
ஒபாமாகூட முஸ்லிம் ஆட்கள் கூப்பிட்ட ஒரு விருந்துக்கும் இதுவரை போகவில்லை. காரணத்தையும்அவர் சொல்லவில்லை.

Thursday, 7 May 2009

ஆழ்மனத்தூறல்

ஐரோப்பிய நாடுகளில் அகதியாக கோருவது
-----------------------------------------------------------

ஒரு மனிதனுக்கு தனது நாட்டில் உயிர்வாழ முடியாத உயிர் அச்சம் இருந்தால் ஐ.நா அகதிகள் சட்டத்தின் கீழ் அகதிகளை ஏற்கிறோம் என்று கையெழுத்து வைத்த நாடுகளில் எவரும் அரசியல் அந்தஸ்த்தைக் கோரலாம். மனிதனை மதித்து அவனது உரிமைகளை மதித்து ஐ.நா உலகம் பூராகவும் உள்ள பல நாடுகளை இந்த அகதிகளை உள்வாங்கும் திட்டத்தில் சேர்த்திருக்கிறது. இந்தியா அகதிகளை சேர்த்துக்கொள்வதில் இருந்து அந்தக்காலத்தில் இருந்தே விலகி இருக்கிறது. ஆனால் அதிக காஷ்மீரிகள் பஞ்சாபிகள் ஐரோப்பிய நாடுகளெங்கணும் அகதிகளாக பெருமளவில் இருக்கின்றனர். ஒருவருக்கான உயிரில் அச்சுறுத்தல் இன்னும் உயிரைக்கொல்ல திரிகிறார்கள் தனது நாட்டில் என்றால் தாமாகவே சரியான ஆதாரங்களை காட்டி அரசியல் அகதி அந்தஸ்த்தை அகதிகளை உள்வாங்கும் நாடுகளின் தூதரகங்களில் கேட்கலாம். சில தூதரகங்கள் தரும் சிலவை நிராகரிக்கும். ஆனால் ரூரிஸ்ட் விசாவில் போயும் சரியான அரசியல் நெருக்குவாரங்களைக்காட்டி அகதி அந்தஸ்த்துக்காக விண்ணப்பிக்கலாம்.

இப்பொழுதுஅதிகமான ஐரோப்பிய நாடுகள் பெருமளவிலான அகதிகளை உள் வாங்கிய படியாலும் போன அகதிகள் பல கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதினாலும் அகதிகளை நிராகரிக்கின்றன.
இங்கிலாந்து,அவுஸ்த்திரேலியா,கனடா போன்ற நாடுகள் அகதி அந்தஸ்த்தை சரியான காரணம் காட்டினால் கொடுக்கின்றன இப்பொழுதும்.
இங்கு அவுஸ்த்திரேலியா, சுவிற்ஸர்லாந்து தூதுவராலயங்களுக்கு தமிழ் ஊடகவியலாளர் பலர் அகதி அந்தஸ்த்து தரும்படியும் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் தெரிவித்து விண்ணப்பித்து இருக்கின்றனர்.
அங்கு அவர்கள் காட்டிய விடயங்களில் தமக்கான உயிர் அச்சுறுத்தல் விடயமாக சுதந்திர ஊடக இயக்கம்- சுனந்தவிடமும்,தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்- ராஜ்குமாரிடமும் கேட்கலாம் என்றும் ஒரு சிலர் குறிப்பிட்டிருக்கின்றனர் தமது விண்ணப்பங்களில்.
இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் உள்ள ஊடகவியலாளர்களை இந்த இரண்டு பேருக்கம் தெரியாமலா இருக்கும்?.
இவர்களுக்கு சொல்லாமல்,தெரியாமல் அப்படி அகதி விசா கேட்டு விண்ணப்பித்த ஒருவரின் விடயம் தொடர்பாக சுனந்தவிடம் எம்பஸி அதிகாரி ஒருவர் கேட்டிருக்கிறார்.
சுனந்தவுக்கு என்ன ஏது என்று தெரியாமல் அப்படி ஏதும் அவருக்கு இல்லை என்று சொல்லி விட்டார்.சுனந்தவிடமோ ராஜ்குமாரிடமோ அனுமதி பெறாமல் அவர்களின் பெயரைப்பாவிப்பது தவறு. மற்றது அவர்களிடம் சொன்னால் அவர்கள் என்ன ''மாட்டன்'' என்றா சொல்லப்போகிறார்கள்.
உண்மையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான அச்சம் இலங்கையில் பெருகிக்கொண்டே வருகிறது என்பது உண்மையே.
ஆனால் 7 நாட்கள் பிரதான செய்தியில் 5 நிமிடங்களுக்கும் மேல் ''உயிர் அச்சம் உயிர் அச்சம்'' என்று சொல்லி எரிச்சல் படுத்துவது சிறீ ரங்காவுக்கு அழகல்ல.அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும.; அதுதான் சரியானதும் விவேகமானதம் கூட.

எமது தமிழ் ஊடகவியலாளர்களுக்கான உயிர் அச்சம் எந்த உருவிலும் வரலாம். என்ற நிலமை இருக்கிறது. தேசிய பத்திரிகை ஒன்றில் இலக்கியப் பக்கம் நடத்தும் நண்பரொருவர் ஒரு சிங்கள கடைக்கு போட்டோ கொப்பி அடிக்க போயிருக்கிறார்
கடைக்காரர் சந்தேகப்பட்டு பொலிஸுக்கு போன் போட்டு விட்டார். அவரை பொலிஸ் பிடித்துக்கொண்டுபோய் நிலையத்தில் வைத்து ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக விசாரனை நடாத்தி பத்திரிகை அலுவலகத்துக்கும் போன் போட்டு விசாரித்து விட்டுத்தான் போக விட்டார்கள். இவ்வளவு சிக்கல் இருக்கிறது இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு. சும்மா ஒருவர் போன் போட்டால் பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள்.

பஞ்சாயத்து,சமஸ்ட்டி,சுயாட்சி முறைகள்
-------------------------------------------------------

நான் லண்டனில் இருந்த பொழுது ஒரு எம்பிக்கள் குழு ஐரோப்பா வந்தது. அதில் ரவூப் ஹக்கீம் எம்பியும் வந்திருந்தார்.
ஐரோப்பாவில் உள்ள சமஸ்ட்டி ஆட்சிமுறை பற்றி கற்பதற்காகவும் அவர்கள் இதனை எப்படி செய்திருக்கிறார்கள் என்பதனை பார்வை செய்வதற்காகவும் வந்ததாக சொன்னார்கள்.
பெல்ஜியத்தில் அழகான இந்த சமஸ்ட்டி முறை இருக்கிறது. மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகள் சமஸ்ட்டி முறையில் இயங்குகின்றன.
மொழி ரீதியான சமஸ்ட்டி முறைக்கு பெல்ஜியம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அத்தோடு இந்தியாவிலும் மொழி ரீதியான சுயாட்சி முறையே கொடுக்கப்பட்டிருக்கிறது. மிக நல்லது. அபிவிருத்தியில் உயர்ந்து கொண்டே போகிறது இந்தியா.
சீனாவில் அபிவிருத்தியின் வளர்ச்சி மிக அபரிதமாகவே இருக்கிறது.தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம். உருது,வங்காளி என்று மொழி ரீதியாகத்தான் ஆட்சி முறையை பகிர்ந்து கொண்டிருக்கிறது இந்தியா.
துரித அபிவிருத்திக்கு இலங்கையில் யுத்தம் நிற்க வேண்டும் என்று சின்னப்பிள்ளைக்கும் தெரியும். உண்மையில் ஆட்சியாளர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்று விளங்குதே இல்லை.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தொடர்ந்தும் அடிபட்டுக்கொண்டிருப்பதை விட தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்தைக்கொடுப்பதன் மூலம் முழு நாட்டையும் மிளிரச்செய்யலாமே அது நல்ல வழியல்லவா?.
தமிழர்கள் டில்லியில்,மும்பாயில்,கேரளத்தில் என்று எல்லா இடமும் இருக்கிறார்கள்,வாழுகிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள் குடும்பம் குடும்பமாக இருக்கிறார்கள்.அதில் தவறேதும் காணவில்லையே இந்தியா.

ஜனாதிபதி கிருபா பத்துவ பேர்ஸி மகிந்த ராஜப்ஷவுக்கு வயது அறுபத்தொன்று.
-------------------------------

18.11.1945 இல் பிறந்திருக்கிறார். 3 ஆண்பிள்ளைகளின் தந்தை அவர்.1989-1990 களில் இனக்கலவரத்தினால் காணாமல் போனவர்களின் தாய்மார்களின் முனனணியில் முக்கிய தலைவர்களில் ஒருவர். காணாமல் போனவர்களின் வலி தொடர்பாக அவர் நன்கே அறிந்தே வைத்திருக்கிறார்.
எப்படியாவது இந்த கொடுமையான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதான ஒளியேற்றுவது அவரின்கடமையாகும். ஏனெனில் அவரே சொல்கிறார் தமழர்,சிங்களவர்,முஸ்லிம்கள்,பறங்கியர்,வேடர்களின் தலைவர் அவர் என்று.
இப்பொழுது ஒரு எம்பிக்கள் குழு இந்தியாவுக்கு போய் பஞ்சாயத்து நடைமுறைகளை பார்த்து வந்திருக்கிறது. மணிசங்கர் ஐயரின் மகளின் கலியாண வீட்டுக்கு போய் விட்டு வந்த பின்பு ஜனாதிபதியும் இதைத்தான் சொல்கிறார்.
''உதெல்லாம் வேலை மினைக்கட்ட வேலை '' என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் சொன்னார்.
ஏலவே எம்மிடம் கிராம சபை,நகர சபை ,மாநகர சபை,மாகாண சபை என்றெல்லம் நல்ல நிர்வாக முறைமை இருக்கிறது. முதல் எல்லாம் சிறப்பாக இயங்கியவை தானே.
வடக்கு கிழக்குக்கு அதிகாரத்தை பகிர்ந்து மேம்படுத்தத்தான் மாகாண சபைகளே முன்மொழியப்பட்டன. ஆனால் வேதனை என்னவென்றால் அந்த இரண்டு மாகாணங்களைத்தவிர மற்ற இடங்களிளெல்லாம் மாகாண சபைகள் இயங்குகின்றன.
எம்பிமாரை அமைச்சர்களாக்கும் திட்டத்தில் அமைச்சர்கள் அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் எண்ணிக்கை நூறைத்தாண்டப்பார்க்கிறது. ஒரு மாகாணத்திற்கு பத்திற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருக்கிறார்கள்.எல்லோரும் தனது பொக்கட்டையும் உறவினர்களின் பொக்கட்டையும் அபிவிருத்தி செய்யத்தான் ஆலாய்ப்பறக்கிறார்கள்.தேசத்தின் ஒரு துரும்பைக்கூட அபிவிருத்தி செய்கிறார்களில்லை.

அனுசரனை:மனைவி
---------------------------

எல்லோருக்கும் நல்லவராகவே வாழ்ந்து நல்லவராக மௌத்தாகிப்போக வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் இது சுயமான விருப்பமாகவே இருக்கிறது. ஆண்களைப்பொறுத்தவரையில் தமது பொறுப்புகள் தமது குடும்ப பொறுப்புகள் பிள்ளைகளின் பொறுப்புகள் வேலையிடத்து,வியாபார பொறுப்புகள் என்று எல்லாவற்றையும் தானே சுமந்து சுமந்து மனம் பாரமாகி அழுந்திப்போகின்றனர்.
தனது பொறுப்புகளை பகிர்ந்து மனைவியிடம் கொடுக்க விருப்பமில்லாதவர்களும் தெளிவில்லாதவர்களுமாக பல ஆண்கள் இருக்கின்றனர்.நல்ல விளக்கமுள்ள அறிவான மனைவியை வீட்டில் வைத்துக்கொண்டு கவலைகள்,சுமைகள், தேவைகளை பகிர்ந்து கொள்ளாமல் யோசித்து யோசித்தே வாழ்க்கையின் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கின்றனர் பல ஆண் கணவன்மார்கள்.
அண்மையில் வேலைக்கு போகும் போது பேலியகொட செக் பொயின்டில் வைத்து பார்த்த ஒரு முச்சக்கர வண்டியில் எழுதப்பட்டிருந்த பின் வாசகம் இது''அனுக்கிரஹய பிரதிஹென்''(அனுசரனை மனைவி) ஆணாதிக்கம் நிறைந்தவர்கள் வாழும் சிறீலங்காவில் இப்படி ஒரு சிங்களக்கணவன்.
உண்மையில் அந்தக்கணம் எனது மனதில் பல நூறு எண்ணங்கள் வந்து போயின.
மனைவியின் பணத்தில் வாங்கிய ஆட்டோவா? அல்லது மனைவிமீது அந்தக்கணவனுக்கு அவ்வளவு பாசமா? பாசமென்றால் அனுசரனை என்று போடத்தேவையில்லையே. அனுசரனை என்று வங்கிகளின் பெயரைத்தானே போடுவார்கள். எப்படியோ இது அந்தக்கணவனை என்னுள் மதிப்பாகவே இன்னும் உட்காரவைத்திருக்கிறது.
உலகத்தில் எவர்தான் ஒருவரைப்பார்த்து மிக நல்லவர் என்று தெரிவித்தாலும், தனது மனைவிக்கு எவர் நல்லவராக இருக்கிறாரோ அவர்தான் சிறந்த மனிதன் என்று முஹமது நபிகளாரின் பொன்மொழி ஒன்று இருக்கிறது.
இன்று எத்தனை கணவர்மாரை நல்லவர் என்று மனைவிகள் சொல்கின்றனர்?;.
தம்பதிகளிடையே எரிச்சலுக்கும் வெறுப்புக்கும் காரணங்களில் முக்கியமானது திருப்தியான பாலுறவின்மையை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலுறவுத்திருப்தி கணவன் மனைவியிடையே இன்னும் நெருக்கத்தையும் அன்பையும் அதிகரிக்கும்.
முறையான பாலுறவின் மூலம் தனது துணைவியை திருப்திப்படுத்தாத ஆண்களை நீசன் என்று நபிகளார் சாடியிருக்கிறார்.
நீசன் என்றால் மிகவும் கெட்டவன் என்பதாகும்.
திருப்தியற்ற பாலுறவில் இருந்துதான் எல்லா சிக்கல்களும் குழப்பங்களும் கணவன் மனைவியிடையே ஏற்படுகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் வெள்ளைக்காரர் மத்தியில் புரிந்துணர்வு,விட்டுக்கொடுப்பு, மற்றவரின் மீது அபரிதமான அன்பை வெளிப்படுத்துதல், வேலைகளை பங்கு போடுதல் என்று நல்ல பழக்க வழக்கங்களை நான் பார்த்திருக்கிறேன்.
இதனால் பொறுப்புக்கள் பகிரப்படும் போது தோளின் சுமைகள் குறைக்கப்படும் போது மன அழுத்தம் விரக்தி வராமல் இருக்கும்.
வாழ்க்கை என்பது நன்றாக வாழ்ந்து நன்றாகவே மௌத்தாகுவதற்காக தரப்பட்டது தானே.
அதனை ஏன் வீணாக்க வேண்டும். அது சரி நீங்கள் நல்லவரா அல்லது தீயவரா என்று மனைவியை ஒருமுறை இப்பொழுதே கூப்பிட்டு கேட்டுப்பாருங்கள்.

எனக்கு பிடித்த கவிதை
-------------------------------

இப்பொழுது மீண்டும் வானம் மிகவும் அச்சமாகவே இருக்கிறது. வானம் மிகவும் நிர்மலமானதுஅழகான வர்ண பறவைகளின் இடம்,
அங்கு நிலா இருக்கிறது,சூரியன் வருகிறான் வருண பகவான் உட்கார்ந்திருக்கிறார், சுருள் முகில்கள் கூட்டமாக இருக்கிறது
என்பவையெல்லாவற்றிற்கும் அப்பால் எப்பொழுது கிபீர் வந்து கொல்லும் என்ற அச்சத்தோடு வானம் பார்க்க அச்சமாகவே இருக்கிறது
இப்பொழுதெல்லாம்.


அமரதாஸ் 1999 இல் எழுதிய கவிதை இது

பறவைகளின் களிப்பு

சற்று முன்னம் சடுதியாய் தோன்றி
மனித உயிர்கள் பறித்து
குடித்த களிப்பிற்றிளைத்து
கிளறி விசிறிய பிணங்களைவிட்டுப்பறந்து
வெண்புகார் கிழித்து
புள்ளியெனவாகி மறைந்த
இயந்திரப்பெரும் பறவைகள் போல
மனிதப்பிணங்களைபேறாய்கிடைத்த
பெருங்களிப்பில் எச்சங்களை பீச்சி பீச்சி
எழுந்து மிதந்து
கருமை படர்த்திக்கரைந்தன காக்கைகள்.